செவ்வாய், 21 ஜூலை, 2009

ஏழையும் இறைவனும்


என் தந்தை துயிலிடம்
ஏழடுக்கு மாடியில்...

ஏழை இன‌ம் மட்டும்
ஏனோ வீதியில்...

எந்தன் தாயிடம்
எண்ணற்ற‌ நகை‌கள்!

ஏழைப் பெண்ணிடம்
இல்லையே நல்லுடைகள்...

அமுதும் தேனும்
நிவேதனம் இறைவனுக்கு

அரைப்பிடி உணவில்லை
நிலகுலைந்த மனிதனுக்கு...

எங்கள் இனத்தின்
ஏந்தல்கள் நாளும்

ச‌ம‌ய‌ம் வ‌ள‌ர்த்தார்,
சாங்கியம் வ‌ள‌ர்த்தார்,

சமத்துவம் மட்டும்
சமைத்திட மறுத்தார்...

அன்பை விதைத்த
ஆன்றோரே...

அற‌த்தை படைத்த
சான்றோரே...

தர்மம் என்றால்
என்னவென்று
தயவோடிவர்க்கு
எடுத்துரைப்பீர்

ம‌க்க‌ள் சேவையே
ம‌கேச‌ன் சேவை

ஏழை சேவையே
ஏழுமலையான் சேவை...

ஏழைக்கு உணவளிப்பீர், அவர் ஏக்கத்தை துடைத்தொழிப்பீர்....


4 கருத்துகள்:

Tamilvanan சொன்னது…

//ச‌ம‌ய‌ம் வ‌ள‌ர்த்தார்,
சாங்கியம் வ‌ள‌ர்த்தார்,

சமத்துவம் மட்டும்
சமைத்திட மறுத்தார்...//

இந்தக் கவிதையிலே ஓர் அற்புதமான கம்னிசியத்துவம் வெளிப்படுகிறது. உணவு மட்டுமல்ல கல்வி, உடை , உறைவிடம் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும்.

sivanes சொன்னது…

சிவனேசு : உண்மைதான் நண்பரே! மேலும் கீழும் உணவைக் கொட்டி வீணாக்குகிறார் ப‌ல மக்கள்.அந்த சொற்ப உணவும் இல்லாது வாடுகிறாரே ஏழை மக்கள்! நினைத்த நிறத்தில், விதத்தில் உடை வாங்கி அணிகிறார் அனேகர், மானத்தை மறைக்கும் உடைக்கும் சிரமப்படுகிறார் சில ஏழைகளும் ஆதரவற்றோரும். வீடென்ற பெயரில் மாளிகையும், அலங்காரம், ஆடம்பரம், நீச்சல் குளம் என கும்மாள‌மிடும் மேல் வர்க்கம்! வானே கூரையாய், பூமியே பாயாய் வாடும் விளிம்பு நிலை மக்கள்! இதையெல்லாம் காண்கையில் உண்மையிலேயே கம்யூனிசம் தேவைதான் இந்த உலகிற்கு என்றே தோன்றுகிறது! ஆனால் கார்ல் மார்க்ஸ் எனும் அந்த மாமேதையின் சித்தாந்தத்தை தவறான கண்ணோட்டத்தோடு கையிலெடுத்துக்கொன்டு உலகில் சில நாடுகள் ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்த்தால் நமக்கும் ஆட்டம் கண்டுவிடுகிறது!

மனசாட்சி : ஆத்தாடி கோட்டு சூட்டுல்லாம் போட்டிருந்தாலும் தொர கரிசனமாத்தான் பேசுராரு! ‌

மனோவியம் சொன்னது…

நன்று சொன்னீர் நன்பரே.சமுதாயம் தவறான பாதையில் செல்கிறது.அதை அழகு தமிழில் அருமையாய் செதுக்கி இருக்கிறீகள்.
//ஏழைக்கு உணவளிப்பீர், அவர் ஏக்கத்தை துடைத்தொழிப்பீர்....// என்று உங்கள் அன்பு ததும்பும் முகத்தை அழகாக காட்டியமைக்கு நன்றி
வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்.

sivanes சொன்னது…

manokarhan krishnan

நன்றி நண்பரே! உண்மைதான், நமது நாட்டிலும் தனி நபர்களால் நடத்தப்படும் பல முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் ஆகியன பொதுமக்களின் கனிவான கருனைக்கு ஏங்கி வாடுகின்றன! அவர்களுக்கு சிறிதளவேனும் நம்மாலான கருனையை நாம் தயவோடு காட்டினால் எவ்வளவோ நன்மை நம் சமுதாயத்திற்கு வாய்க்கும் அல்லவா ?