இவ்விரு கவிதைகளும் தமிழ்ப்பள்ளி மாணவர் உதவிநிதி அறவாரியத்தின் வெளியீடான "வென்று வா தம்பி !" மாணவர்க்கான கவிதைகள் நூலில் இடம்பெற்ற அடியேனின் படைப்புகள். பரிசுக்கும் பாராட்டுக்கும் நன்றிகள். தமிழ்ப்பள்ளி மாணவர் உதவிநிதி அறவாரியம் மேன்மேலும் சிறந்தோங்க நல்வாழ்த்துகள்.
மாணவமணியே !
நீ
வெற்றியின் விளைநிலம்
விவேகத்தின் பிறப்பிடம்
எந்தன் இனத்தின் கண்
இச்சமுதாயத்தின் தூண் !
கட்டபொம்மன் வீரவாள் - நீ
கொல்லும் அரிவாள் ஆகிவிடாதே
வாழப்பிறந்த என் இனமே - நீ
வீழ்ந்தால் விதியல்ல உன்வினையே!
ஊட்டாமலேயே உயர்ந்தவர்கள்,
ஊருக்குள்ளே பலருண்டு,
ஊக்கத்தோடு செயல்பட்டால்,
உன்னை மிஞ்சிட எவருண்டு ?
கடமையுணர்வைக் கொன்டு நட!
கண்ணியம் காத்து சிறந்து நட!
கல்வியைத் துணையாய் ஏற்றுக்கொள்!
கற்றவனாய் உனை மாற்றிக்கொள்!
எந்தத்தொழில் நீ புரிந்தாலும் - அதில்
ஏற்றம் கண்டிட வழிதேடு,
காலம் உனக்கு வழிகாட்டும்,
கவலை மறந்து நலம் சேரும்!
நம் சமுதாயத்தை மறவாதே - அதன்
நலனுக்கு உழைத்திட தயங்காதே
நாம் அனைவரும் இங்கே ஒன்றே,
நாடிடுமே நலம் நன்றே...!
###########################################################

படபடக்கும் சிறகு காட்டும் கண்ணாமூச்சியே
எட்டிப்பிடித்து தொட்டுப்பார்க்க ஏங்குது எண்ணம்
இருந்தும் வேண்டாமென்று இழுத்துப்பிடித்து தடுக்குது உள்ளம்
வானவில்லின் வர்ணம் காட்டும் உந்தன் மேனியே உலகின்
வனப்பையெல்லாம் தன்னில் காட்டும் வண்ண ராணியே
அழகு சிறகு படபடக்க வானில் பறந்திடு நீ
அன்று மலர்ந்த மலரில் அமர்ந்து தேனை அருந்திடு
முழுமையடையும் முன்னே நீ ஏன் மனிதன் கண்பட்டாய் ?
பார்...! கம்பளிப்புழு உனை அழித்தே பட்டு நெய்து விட்டான்!
கம்பளிப்புழு என்றால் சிதறி கன்னியர் ஓடுவார் - இருந்தும்
கண்கவரும் பட்டாய் மாற களித்து உடுத்துவார்!
என்ன ஞாயம் என்ன நேயம்? மனித மனதுக்கு ! பிற
உயிரை மாய்த்து மினுக்கும் பட்டும் நமக்கு எதற்கு?