புதன், 27 நவம்பர், 2013

தேவதைக்கு ஒரு திருமண வாழ்த்து...!


 Registration photo.jpg ஐக் காட்டுகிறது

வரம்தரும் தேவதை
இல்லையென்றேன்
வாழ்வில்
உன்னைக் காணும்வரை...!

தேவதை திருமணம்
புரிவதில்லை
என்றே மனதில்
எண்ணியிருந்தேன்
தேனினும் இனிய குணத்தவளே
உன் திருமணம் கண்டின்று
நம்புகிறேன்...!

தேவதை திருமணம்
புரிவதுண்டு...!
நம் வாழ்விலும் தேவதை
வருவதுண்டு...!
உம்போல் அன்பை வாரித்
தருவதுண்டு...!
அதைக் கண்டுகொன்டேன் நான்
உன்னில் இன்று...!

நீ
அன்பில் என்றும்
தாயானவள்‍
அரவணைப்பில் இன்றும்
சேயானவள்

நீ
உள்ளத்தில் என்றும்
பூப்போன்றவள்
உழைப்பில் அயரா
புயல் போன்றவள்

நீ
உறுதியில் அசையா
மலை போன்றவள்
உண்மை அன்பில் பொழியும்
மழை போன்றவள்

நீ
எந்தன் இதயத்தில்
என்றும் நிலையானவள்
எந்த நிலையிலும்
எனைவிட்டு நீங்காதவள்...!

அழ‌கிய மணாளன் கையோடு என்றும்
அன்பே வாழ்வின் முதலீடு - உங்கள்
மனமும் குணமும் ஒன்றாக - குன்றா
மகிழ்வே வாழ்வு என்றாக 

வளம் பல கொண்டு
நலம் சூழ என்றும்
வாழிய நீங்கள் பல்லாண்டு
வாழ்த்துகிறேன் நான் அன்போடு..!

 











 

சனி, 5 அக்டோபர், 2013

நன்றியும் நல்வாழ்த்துகளும்

இவ்விரு கவிதைகளும் தமிழ்ப்பள்ளி மாண‌வர் உதவிநிதி அற‌வாரியத்தின் வெளியீடான "வென்று வா தம்பி !" மாண‌வர்க்கான கவிதைகள் நூலில் இடம்பெற்ற அடியேனின் படைப்புகள். பரிசுக்கும் பாராட்டுக்கும் நன்றிகள். த‌மிழ்ப்பள்ளி மாணவர் உதவிநிதி அறவாரியம் மேன்மேலும் சிற‌ந்தோங்க நல்வாழ்த்துகள்.  




மாணவமணியே !


 நீ
வெற்றியின் விளைநிலம்
விவேகத்தின் பிற‌ப்பிடம்
எந்தன் இனத்தின் கண்
இச்சமுதாயத்தின் தூண் !

கட்டபொம்மன் வீரவாள் ‍- நீ
கொல்லும் அரிவாள் ஆகிவிடாதே
வாழப்பிறந்த என் இனமே - நீ ‍
வீழ்ந்தால் விதியல்ல உன்வினையே!

ஊட்டாமலேயே உயர்ந்தவர்கள்,
ஊருக்குள்ளே பலருண்டு,
ஊக்கத்தோடு செயல்பட்டால்,
உன்னை மிஞ்சிட எவருண்டு ?

கடமையுணர்வைக் கொன்டு நட!
கண்ணியம் காத்து சிறந்து நட!
க‌ல்வியைத் துணையாய் ஏற்றுக்கொள்!
கற்றவனாய் உனை மாற்றிக்கொள்!

எந்தத்தொழில் நீ புரிந்தாலும் - அதில்
ஏற்றம் கண்டிட‌ வழிதேடு,
காலம் உனக்கு வழிகாட்டும்,
கவலை மறந்து நலம் சேரும்!

நம் சமுதாயத்தை மறவாதே - அதன்
நலனுக்கு உழைத்திட தயங்காதே
நாம் அனைவரும் இங்கே ஒன்றே,
நாடிடுமே நலம் நன்றே...!


###########################################################

பளபளக்கும் வர்ணம் ப‌டைத்த‌ பட்டாம்பூச்சியே ‍அழகு
ப‌ட‌ப‌ட‌க்கும் சிற‌கு காட்டும் க‌ண்ணாமூச்சியே

எட்டிப்பிடித்து தொட்டுப்பார்க்க ஏங்குது எண்ண‌ம்
இருந்தும் வேண்டாமென்று இழுத்துப்பிடித்து த‌டுக்குது உள்ளம்

வான‌வில்லின் வ‌ர்ண‌ம் காட்டும் உந்தன் மேனியே ‍ உல‌கின்
வ‌ன‌ப்பையெல்லாம் த‌ன்னில் காட்டும் வண்ண ராணியே

அழ‌கு சிற‌கு ப‌ட‌ப‌டக்க வானில் பறந்திடு நீ
அன்று மலர்ந்த ம‌ல‌ரில் அம‌ர்ந்து தேனை அருந்திடு

முழுமையடையும் முன்னே நீ ஏன் ம‌னித‌ன் க‌ண்ப‌ட்டாய் ?
பார்...! க‌ம்ப‌ளிப்புழு உனை அழித்தே ப‌ட்டு நெய்து விட்டான்!

க‌ம்ப‌ளிப்புழு என்றால் சிதறி க‌ன்னிய‌ர் ஓடுவார் - இருந்தும்
க‌ண்க‌வ‌ரும் ப‌ட்டாய் மாற க‌ளித்து உடுத்துவார்!

என்ன‌ ஞாயம் என்ன‌ நேய‌ம்? ம‌னித‌ ம‌ன‌துக்கு ! பிற‌
உயிரை மாய்த்து மினுக்கும் ப‌ட்டும் நமக்கு எத‌ற்கு?

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

தன்னம்பிக்கை...!


 


மண்ணிலே வீழ்ந்தாலும் மனச்சோர்வு கொள்ளாதே
ந‌ல்மரமாய் விழிமலர்ந்தே நற்பல‌ன்க‌ள் தாம் த‌ருவாய்
சுடும் பாலைவனத்தில் புதைந்தாலும் சோகம் கொன்டு வாடாதே - சுடர்
சோலையெனவே நீ மலர்ந்தே சுகம் ஈந்து மகிழ்ந்திருப்பாய்...

நதியதனில் மூழ்கிடினும் நாதியற்று போய்விடினும் ‍- ஆங்கே
நானலாக முளைத்தெழுவாய் உன் இருப்புதனை உண‌ர்த்திடுவாய்
நடுக்கடலில் வீழ்ந்தாலும் மீளும் வழி இழந்தாலும்
நல்முத்தாய் விளைந்திடுவாய் புவி சேர்ந்து புகழ்கொள்வாய்

நெருப்பிலிட்டு எரித்தாலும் நீறுபூத்து மறைத்தாலும்
சக்கரவாகப் பறவையாய் நின் சாம்பலினின்றே உயிர்த்தெழுவாய்
சுடும் உண்மைகள் முரசு கொட்ட சூராவளியாய் புற‌ப்படுவாய்
சூழும் துயர்கள் தூர விலகிட சூரியனாய் வென்று நிலைத்திருப்பாய்

நீலவானைச் சேர்ந்தாலும் நிலவைக்கண்டு மலைத்தாலும் 
நட்சத்திரமாய் உருவெடுத்தே வ‌ழிகாட்டியென ஒளிகாட்டிடுவாய் 
உயிர் உடலை விட்டு பிரிந்தாலும் உடல் உலகை விட்டு மறைந்தாலும்
உயர்குணமே நம்மை வாழவைக்கும் நாம் மறைந்தும் நம்பேர் நிலைத்திருக்கும்

நம்பிக்கை ஒன்றே ஆதாரம் நல்வாழ்வுக்கு அதுவே அஸ்திவாரம்
ந‌ம்மனமும் குண‌மும் உயர்ந்திட்டால் நிதம் ம‌ண்ணில் வாழ்வது மணம் வீசும்
நட்பும் சுற்றமும் போற்றிடட்டும், பெற்றோர் உற்றோர் வாழ்த்திடட்டும்
நலமும் வளமும் சூழ‌ட்டும், நல்லோர் நன்றே வாழ்ந்திடட்டும்...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

காசு, பணம், துட்டு, மணீ, மணீ....!!!













பத்தும் செய்யும் பணம் - அதற்குண்டு
பாதகம் செய்யும் குண‌ம்
நட்பையும் பெற்றுத் தரும் - சமயத்தில்
நட்டாற்றிலும் விட்டு விடும்

கக்ஷ்டமில்லா வளமும் தரும் - வாழ்வுக்கு
இக்ஷ்டமான பலதும் தரும்
அழகாய் வாழவும் வழிசெய்யும் - ந‌ல்
அறிவை வள‌ர்க்கவும் துணைசெய்யும்
 
இல்லாதவரை வாட வைக்கும்
இயலாமை தந்து ஏங்க வைக்கும்
மாண்பு இல்லா வாழ்வு தந்து ‍ - சமயத்தில்
மாபாதகம் புரியவும் வகைசெய்யும்

நல்லவர் கையில் பணமிருந்தால் - அது
நாலு பேருக்கு நன்மை செய்யும் - அதுவே
தீயவனுடைய‌ பையிலிருந்தால் ஊரையே
தீயிட்டுக் கொளுத்தவும் வழி செய்யும்

கொலை, கொள்ளை, பாதகங்கள்
கொடுமை நிறைந்த பல செயல்கள்
பணமே இவற்றுக்கு ஆதாரம் - அதற்கென
மனமது பூசுது அரிதாரம்...!

போற்றி வாழ்த்தும் உற‌வும் தரும் ‍- பிறர்
புறம் பேசித் தூற்றும் போக்கும் தரும்
புகழ்ச்சி தந்து நெகிழ்ச்சி தரும் ‍ - நிஜத்தில்
ம‌கிழ்ச்சியை பறித்து மனக்கிளர்ச்சி தரும்

போதுமான பணம் வள‌த்தைத்தரும் - மிஞ்சினால்
போதையான மனதைத் தரும்
போதும் எனும் மனம் நன்மை தரும் ‍ அது
போகம் நிறைந்த வாழ்வு தரும்

பணம் படைத்த பண்புடையோரே - நல்ல‌
பாங்(bank )குடன் பண‌த்தைக் கையாள்வீர்
அளவுடன் நித்தம் தான‌ம் செய்து
அவனியில் புகழுடன் வாழ்ந்திடுவீர்...!

 


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நன்றி தேனீயே...!




நன்றி தேனீயே...!

உன்னைக்கண்டு வியக்கிறேன்
உருவில் சிறிய தேனீயே - உன்
உழைப்பைக் கண்டு மலைக்கிறேன்
உயர்தேனை சுமக்கும் தோனியே...

அடுக்கடுக்காய் அறை அமைத்து
அழகோடு அரண்மனை சமைத்து
இராணித்தேனீ தலைமையில் -  நீ
இயந்திரமாய் இயங்குவாய்

சுறுசுறுப்பாய் உழைக்கிறாய்
சுமுகமாக வாழ்கிறாய் - அன்று
மலர்ந்த மலர‌மர்ந்து
மதுரமான தேன் சுமந்து

கூட்டில் தேனை சேர்க்கிறாய்
கூட்டுக் குடும்பமாய் நீ வாழ்கிறாய் - உன்
உயிரை அழித்துக் கொல்கிறோம் - உன்
உழைப்பைத் திருடிக் கொள்கிறோம்...!

மலரிடத்து தேனை ஈர்த்து
மனிதருக்கு வார்த்திடும்
மதிப்புக்குரிய தேனீயே உனக்கு
மனம் நிறைந்த நன்றியே...

13 Surprising Uses for Honey

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

எதிர்நீச்சல்




காலப் பெருவெளியில்
கானலில்
எதிர்நீச்சல்....!

எண்ண வானில்
சிறகடிக்கும்
மனரெளத்திரங்கள்...!

கண் சிமிட்டும்
கணங்களில்
கரைந்தோடும்
கவிதைகளாய்
கண்ணீர்த்துளிகள்...!

மெளன யுத்தங்கள்
மனசெல்லாம்
காயங்கள்...!

முகவரி
தொலைத்த‌
முகாரிகளாய்...!

முடிவைத் தேடி
தொலைந்துபோன‌
மேகங்கள்... !

அலைமோதும்
நினைவுகள்
அழியாத 
பிம்பங்கள்...!

வானம்
விரித்த‌
பாதையில்
வாழ்க்கை
விதைத்த‌
பயணியாய்...!

மீண்டும் மீண்டும்
தாயின் கருப்பைதேடும்
ஒற்றைப் புள்ளியாய்
இந்த வாழ்வோடு...!


 
 சிவனேசு
பினாங்கு

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஏழையின் சிரிப்பில் இயற்கை...!




சூரியனின் சிரிப்பு...
ஒளிவீசி கதிர்பாய்ச்சி ஞாயிறு கோலோச்சும்,
உயிர்களும், பயிர்களும் அதன் அருமை கண்டு மெச்சும்,
இதமான ஒளிவீசி உலகை புலர வைக்கும்,
இரவு நீங்கி பகல் பிற‌ந்திட புவி மலர்ந்து சிரிக்கும்...

நிலவுப்பெண்ணின் வனப்பு...
தேய்பிறையாய், வளர்பிறையாய் காட்சி தந்து ஒளிரும்,
தேனமுதாம் பெளர்ணமியென பரிண‌மித்து மிளிரும்,
அழகு நிலா வானில் கண்டு, கவிதை பொங்கி வழியும்
அடர் இருளும் வழிவிடவே, பகலென ஒளி பொழியும்…

தென்றலின் அணைப்பு...
அலைபாயும் தென்ற‌லது அன்பு மொழியில் கெஞ்சும்,
அருகில் வந்து நெருங்கி நின்று அரவணைத்து கொஞ்சும்,
உடல் தழுவி, உளம் மீட்டும் இன்னமுத கீதம்,
உயிர் வருடி உலகை அணைக்கும் உருவமில்லா நாதம்...

இரவின் கதகதப்பு...
நீல வண்ண நிறம் பொழியும் இரவுப்பெண்ணின் ஆடை,
நீள் பொழுதின் நிறம் காட்டும் கார் நீல ஓடை,
உலகில் நாளும் இரவைப் படைத்து இருளில் ஆழ்த்திடும்,
உயிரை அணைத்து, உற‌க்கம் வளர்க்கும் இருண்ட ராஜ்யம்...

நட்சத்திர பூரிப்பு...
ஆயிரம் ஆயிரம் கண்கள் சிமிட்டிட வானில் கதைபல பேசும்,
அள்ள முடியா பொற்காசுகள் விண்ணில் இரைந்து மின்னும்,
எட்டா வானில் எண்ணிலடங்கா மின்மினிப்பூக்களின் கூட்டம்,
எழில் பொங்க‌ நடமிடும் நவரச நட்சத்திர தோட்டம்...


வானவில்லின் அணிவகுப்பு...
ஏழ் நிற‌ங்கள் எழுந்து வந்து வானில் காட்டும் ஜாலம்,
எவரோ அடுக்கி வைத்துச்சென்ற வட்ட வடிவ கோலம்,
அழகு வர்ணங்கள் திரண்டு வந்து அணிவகுக்கும் காட்சி,
அன்பு மனங்கள் குழந்தையென துள்ளச் செய்யும் மாட்சி...

இறைவனின் படைப்பு...
எல்லாம் படைத்தவன், எங்கும் நிறைந்தவன்,
இறையெனும் அரும்பெயர் கொன்டவன்,
எழிலாய் ஒளிர்ந்து, உயிர்களில் நிறைந்து
உலகை அருளால் ஆண்டவன்,

பயிர்கள் பொழிய, வளங்கள் கொழிக்க
ஐந்தொழில் ஆற்றிடும் அற்புதன்,
உயிர்கள் தழைக்க, உள்ளங்கள் செழிக்க,
இயற்கையாய் மிளிரும் பொற்பதன்...

இதயத்தை ஆட்சி செய்பவன் அவன்
எல்லா உயிரிலும் நிறைபவன்
இயற்கையை படைத்து காப்பவன்,
அவன் தானே இயற்கையில் உறைபவன்....!
  
Preview

சிவனேசு
பினாங்கு



























































   

செவ்வாய், 30 ஜூலை, 2013

இளைஞனே...


 Art: Cubist-101-3030-Im-The-Man-2.jpg by Artist Thomas C. Fedro


இளைஞனே...

தன்மானத்துடன் எழுந்து நட ‍-  நாளைய‌
தலைவன் நீயே நிமிர்ந்து நட‌
உண்மையைத் துணையாய் கொன்டுவிடு
உன் உயர்வுக்கு நாளும் பாடுபடு...!

கல்வியே என்றும் நம் கண்கள்
கடமையே என்றும் நம் செல்வம்
கற்றவனாய் உனை மாற்றிக்கொள்
கருணையை மனதில் ஏற்றிக்கொள்

வன்முறை வேண்டாம் ஒதுங்கிவிடு - வாழ்வை
விடமென அழித்திடும் விலகிவிடு
வாழ்வில் உயர்நிலை அடைந்துவிடு
வசந்தம் உன்வழி வாழ்ந்துவிடு

குற்றச் செயல்களில் இறங்காதே
குண்டடிபட்டு மாளாதே
குறுக்கு வழியில் வாழாதே - உன் ஆயுளை
குறுக்கிக் கொள்ளாதே

செய்யும் தொழிலை மதித்து நட‌
சோம்பல் களைந்து எழுந்து ந‌ட‌
சிந்தையில் ஏற்றம் கொன்டுவிடு
சிற‌ந்தவன் நீ எனக்காட்டிவிடு

வாழ நேர்வழி பல உண்டு
வையகம் வாழ்த்த வாழ்ந்துவிடு
சேரிடம் அறிந்து நீ சேர்ந்தால்
சிறப்பாய் நல்வழி நீ காண்பாய்

குள்ள நரிகளை நாடாதே - அவர்
கருவியாய் மாறிட விழையாதே - இந்த‌
சமுதாயத்தின் இதயநாடி இனிவரும்
சரித்திரம் போற்றும் ச‌காப்தம் நீ...!

தாய்நாடும் வீடும் போற்றிடவே
தாயாய், ச‌கோதரி, தோழியாய்
சிந்தை நெகிழப் பாடுகிறேன் -  நீ
சிறந்திட நாளும் வாழ்த்துகிறேன்



சிவனேசு
பினாங்கு