புதன், 18 நவம்பர், 2009

விழித்தூரல்கள்


எந்தன் இனத்தின் கண்கள்,
இன்று ஆகிப்போயின புண்கள்...!

கருணையற்ற ஓநாய்கள் எங்கள் இனத்தின் கன்றுகளை கடித்துக்குதறி ருசிக்கின்றன...,
(தற்)காத்திட வேண்டிய எந்தன் இனம்
கைகட்டி களிப்புடன் ரசிக்கின்றது...!

நம்பிய கரங்களின்
நகங்கள் எம் இளைஞனை
நாராய் கிழித்தெரிய,
நிர்க்கதியாக அவர் குடும்பம்
நிலைகுலைந்தே
நடுத்தெரு ஏகிடுதே...!

இற‌ந்தவர் எனக்கு உறவு அல்ல,
யாரோ எவரோ அறிந்ததில்லை,
இனத்தால், மொழியால், என் உறவே, அவர்
இறப்பு எனக்கும் பேரிழப்பே...!
ஏனோ என் உயிர் வலிக்கிறதே...!
எந்தன் ரத்தமும் இன்று கொதிக்கிறதே...!

வறுமையின் பிடியில் வாழ்விழந்து,
வருத்தத்தில் வாடுது எந்தன் இனம்,
சேரக் கூடா இடம் சேர்ந்து
சீரழிந்தே நாளும் சிதையுது,

காப்பவர் இங்கு காணவில்லை,
கரை சேர்ப்பவர் யாரோ தெரியவில்லை...!
மேய்ப்பவன் இங்கு சரியில்லை,
மனிதமும் மண்ணில் வாழவில்லை...!

தமிழன் உயிர் என்ன அற்பமா ?
அவன் ஆயுள் என்ன சொற்பமா ?
ஒற்றுமை குலைந்த என் இனமே, நீ
உருப்படும் நாளும் உலகில் உண்டா ...??????????

சனி, 14 நவம்பர், 2009

நினைவெனும் சங்கீதம்



அன்பே,
உன் விழி சிந்தும் ஒளிச்சாரலில்,
என் வழி தோறும்
வானவில் தோரண‌ங்கள்...,

உன் பாத‌ச்சுவடு பட்டு,
இந்தப் பாறையிலும்
இன்று ஈரம் துளிர்த்ததே...!?

இருண்ட பிரதேசமாய்
இதயம்,
உன் வரவால் மின்னலுக்கு
இடம்பெயர்ந்ததே...!

வரண்ட நதியாய்
வாழ்க்கை,
உன் அன்பெனும்
ஊற்றில் இன்று
சங்கமமானதே...!

வருத்தம் தோய்ந்த
வாழ்க்கை
உன் உறவின் வரவால்
வசந்தகாலத்தின்
வடிவம் பூண்டதே...!

கவி பேசுதே உன் மெளனம் ,
உயிரை விலை பேசுதே
உன் உருவம்...!

நிமிடம் தோறும்
நினைந்து வியக்கிறேன்,
உன்
நினைவுச் சாரலில்
நனைந்து சிலிர்க்கிறேன்...!

மறந்தும் மரி‌க்காது நினைவு...!
அன்பே
மரித்தும் மறக்காது நினைவு...!

உனக்காக உன்னோடு
உன் நினைவுகள் மட்டும்
உயிர் கலந்து என்னோடு...!