செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

காசு, பணம், துட்டு, மணீ, மணீ....!!!













பத்தும் செய்யும் பணம் - அதற்குண்டு
பாதகம் செய்யும் குண‌ம்
நட்பையும் பெற்றுத் தரும் - சமயத்தில்
நட்டாற்றிலும் விட்டு விடும்

கக்ஷ்டமில்லா வளமும் தரும் - வாழ்வுக்கு
இக்ஷ்டமான பலதும் தரும்
அழகாய் வாழவும் வழிசெய்யும் - ந‌ல்
அறிவை வள‌ர்க்கவும் துணைசெய்யும்
 
இல்லாதவரை வாட வைக்கும்
இயலாமை தந்து ஏங்க வைக்கும்
மாண்பு இல்லா வாழ்வு தந்து ‍ - சமயத்தில்
மாபாதகம் புரியவும் வகைசெய்யும்

நல்லவர் கையில் பணமிருந்தால் - அது
நாலு பேருக்கு நன்மை செய்யும் - அதுவே
தீயவனுடைய‌ பையிலிருந்தால் ஊரையே
தீயிட்டுக் கொளுத்தவும் வழி செய்யும்

கொலை, கொள்ளை, பாதகங்கள்
கொடுமை நிறைந்த பல செயல்கள்
பணமே இவற்றுக்கு ஆதாரம் - அதற்கென
மனமது பூசுது அரிதாரம்...!

போற்றி வாழ்த்தும் உற‌வும் தரும் ‍- பிறர்
புறம் பேசித் தூற்றும் போக்கும் தரும்
புகழ்ச்சி தந்து நெகிழ்ச்சி தரும் ‍ - நிஜத்தில்
ம‌கிழ்ச்சியை பறித்து மனக்கிளர்ச்சி தரும்

போதுமான பணம் வள‌த்தைத்தரும் - மிஞ்சினால்
போதையான மனதைத் தரும்
போதும் எனும் மனம் நன்மை தரும் ‍ அது
போகம் நிறைந்த வாழ்வு தரும்

பணம் படைத்த பண்புடையோரே - நல்ல‌
பாங்(bank )குடன் பண‌த்தைக் கையாள்வீர்
அளவுடன் நித்தம் தான‌ம் செய்து
அவனியில் புகழுடன் வாழ்ந்திடுவீர்...!

 


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நன்றி தேனீயே...!




நன்றி தேனீயே...!

உன்னைக்கண்டு வியக்கிறேன்
உருவில் சிறிய தேனீயே - உன்
உழைப்பைக் கண்டு மலைக்கிறேன்
உயர்தேனை சுமக்கும் தோனியே...

அடுக்கடுக்காய் அறை அமைத்து
அழகோடு அரண்மனை சமைத்து
இராணித்தேனீ தலைமையில் -  நீ
இயந்திரமாய் இயங்குவாய்

சுறுசுறுப்பாய் உழைக்கிறாய்
சுமுகமாக வாழ்கிறாய் - அன்று
மலர்ந்த மலர‌மர்ந்து
மதுரமான தேன் சுமந்து

கூட்டில் தேனை சேர்க்கிறாய்
கூட்டுக் குடும்பமாய் நீ வாழ்கிறாய் - உன்
உயிரை அழித்துக் கொல்கிறோம் - உன்
உழைப்பைத் திருடிக் கொள்கிறோம்...!

மலரிடத்து தேனை ஈர்த்து
மனிதருக்கு வார்த்திடும்
மதிப்புக்குரிய தேனீயே உனக்கு
மனம் நிறைந்த நன்றியே...

13 Surprising Uses for Honey

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

எதிர்நீச்சல்




காலப் பெருவெளியில்
கானலில்
எதிர்நீச்சல்....!

எண்ண வானில்
சிறகடிக்கும்
மனரெளத்திரங்கள்...!

கண் சிமிட்டும்
கணங்களில்
கரைந்தோடும்
கவிதைகளாய்
கண்ணீர்த்துளிகள்...!

மெளன யுத்தங்கள்
மனசெல்லாம்
காயங்கள்...!

முகவரி
தொலைத்த‌
முகாரிகளாய்...!

முடிவைத் தேடி
தொலைந்துபோன‌
மேகங்கள்... !

அலைமோதும்
நினைவுகள்
அழியாத 
பிம்பங்கள்...!

வானம்
விரித்த‌
பாதையில்
வாழ்க்கை
விதைத்த‌
பயணியாய்...!

மீண்டும் மீண்டும்
தாயின் கருப்பைதேடும்
ஒற்றைப் புள்ளியாய்
இந்த வாழ்வோடு...!


 
 சிவனேசு
பினாங்கு

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஏழையின் சிரிப்பில் இயற்கை...!




சூரியனின் சிரிப்பு...
ஒளிவீசி கதிர்பாய்ச்சி ஞாயிறு கோலோச்சும்,
உயிர்களும், பயிர்களும் அதன் அருமை கண்டு மெச்சும்,
இதமான ஒளிவீசி உலகை புலர வைக்கும்,
இரவு நீங்கி பகல் பிற‌ந்திட புவி மலர்ந்து சிரிக்கும்...

நிலவுப்பெண்ணின் வனப்பு...
தேய்பிறையாய், வளர்பிறையாய் காட்சி தந்து ஒளிரும்,
தேனமுதாம் பெளர்ணமியென பரிண‌மித்து மிளிரும்,
அழகு நிலா வானில் கண்டு, கவிதை பொங்கி வழியும்
அடர் இருளும் வழிவிடவே, பகலென ஒளி பொழியும்…

தென்றலின் அணைப்பு...
அலைபாயும் தென்ற‌லது அன்பு மொழியில் கெஞ்சும்,
அருகில் வந்து நெருங்கி நின்று அரவணைத்து கொஞ்சும்,
உடல் தழுவி, உளம் மீட்டும் இன்னமுத கீதம்,
உயிர் வருடி உலகை அணைக்கும் உருவமில்லா நாதம்...

இரவின் கதகதப்பு...
நீல வண்ண நிறம் பொழியும் இரவுப்பெண்ணின் ஆடை,
நீள் பொழுதின் நிறம் காட்டும் கார் நீல ஓடை,
உலகில் நாளும் இரவைப் படைத்து இருளில் ஆழ்த்திடும்,
உயிரை அணைத்து, உற‌க்கம் வளர்க்கும் இருண்ட ராஜ்யம்...

நட்சத்திர பூரிப்பு...
ஆயிரம் ஆயிரம் கண்கள் சிமிட்டிட வானில் கதைபல பேசும்,
அள்ள முடியா பொற்காசுகள் விண்ணில் இரைந்து மின்னும்,
எட்டா வானில் எண்ணிலடங்கா மின்மினிப்பூக்களின் கூட்டம்,
எழில் பொங்க‌ நடமிடும் நவரச நட்சத்திர தோட்டம்...


வானவில்லின் அணிவகுப்பு...
ஏழ் நிற‌ங்கள் எழுந்து வந்து வானில் காட்டும் ஜாலம்,
எவரோ அடுக்கி வைத்துச்சென்ற வட்ட வடிவ கோலம்,
அழகு வர்ணங்கள் திரண்டு வந்து அணிவகுக்கும் காட்சி,
அன்பு மனங்கள் குழந்தையென துள்ளச் செய்யும் மாட்சி...

இறைவனின் படைப்பு...
எல்லாம் படைத்தவன், எங்கும் நிறைந்தவன்,
இறையெனும் அரும்பெயர் கொன்டவன்,
எழிலாய் ஒளிர்ந்து, உயிர்களில் நிறைந்து
உலகை அருளால் ஆண்டவன்,

பயிர்கள் பொழிய, வளங்கள் கொழிக்க
ஐந்தொழில் ஆற்றிடும் அற்புதன்,
உயிர்கள் தழைக்க, உள்ளங்கள் செழிக்க,
இயற்கையாய் மிளிரும் பொற்பதன்...

இதயத்தை ஆட்சி செய்பவன் அவன்
எல்லா உயிரிலும் நிறைபவன்
இயற்கையை படைத்து காப்பவன்,
அவன் தானே இயற்கையில் உறைபவன்....!
  
Preview

சிவனேசு
பினாங்கு