வெள்ளி, 13 செப்டம்பர், 2013

தன்னம்பிக்கை...!


 


மண்ணிலே வீழ்ந்தாலும் மனச்சோர்வு கொள்ளாதே
ந‌ல்மரமாய் விழிமலர்ந்தே நற்பல‌ன்க‌ள் தாம் த‌ருவாய்
சுடும் பாலைவனத்தில் புதைந்தாலும் சோகம் கொன்டு வாடாதே - சுடர்
சோலையெனவே நீ மலர்ந்தே சுகம் ஈந்து மகிழ்ந்திருப்பாய்...

நதியதனில் மூழ்கிடினும் நாதியற்று போய்விடினும் ‍- ஆங்கே
நானலாக முளைத்தெழுவாய் உன் இருப்புதனை உண‌ர்த்திடுவாய்
நடுக்கடலில் வீழ்ந்தாலும் மீளும் வழி இழந்தாலும்
நல்முத்தாய் விளைந்திடுவாய் புவி சேர்ந்து புகழ்கொள்வாய்

நெருப்பிலிட்டு எரித்தாலும் நீறுபூத்து மறைத்தாலும்
சக்கரவாகப் பறவையாய் நின் சாம்பலினின்றே உயிர்த்தெழுவாய்
சுடும் உண்மைகள் முரசு கொட்ட சூராவளியாய் புற‌ப்படுவாய்
சூழும் துயர்கள் தூர விலகிட சூரியனாய் வென்று நிலைத்திருப்பாய்

நீலவானைச் சேர்ந்தாலும் நிலவைக்கண்டு மலைத்தாலும் 
நட்சத்திரமாய் உருவெடுத்தே வ‌ழிகாட்டியென ஒளிகாட்டிடுவாய் 
உயிர் உடலை விட்டு பிரிந்தாலும் உடல் உலகை விட்டு மறைந்தாலும்
உயர்குணமே நம்மை வாழவைக்கும் நாம் மறைந்தும் நம்பேர் நிலைத்திருக்கும்

நம்பிக்கை ஒன்றே ஆதாரம் நல்வாழ்வுக்கு அதுவே அஸ்திவாரம்
ந‌ம்மனமும் குண‌மும் உயர்ந்திட்டால் நிதம் ம‌ண்ணில் வாழ்வது மணம் வீசும்
நட்பும் சுற்றமும் போற்றிடட்டும், பெற்றோர் உற்றோர் வாழ்த்திடட்டும்
நலமும் வளமும் சூழ‌ட்டும், நல்லோர் நன்றே வாழ்ந்திடட்டும்...