தமிழும் தமிழனும்...!
தமிழே உயிரென்று கதையளப்பார் இவர்
தமிழ் மூச்சென்றும் பேச்சென்றும் உரைத்திடுவார்
பின்னனி பார்த்தால் மாறி நிற்பார்
பிற மொழியதன் காலில் வீழ்ந்திருப்பார்
வேடம் இட்டுத் திரிந்திடுவார் தம் பிள்ளையை
வேற்றுப் பள்ளிக்கு அனுப்பிடுவார்
சீனம் பொருளாதாரத்திற்கு ஆதாரம் என
சீராய் சமாதானம் உரைத்துக்கொள்வார்
தமிழன் தானென்று சொல்லிடுவார்
தலைகவிழ்ந்தே ஆங்கிலத்தின் கால்பிடிப்பார்
ஆங்கிலம், மலாய் முக்கியம்தான்
ஆனால் அதற்கென தமிழைத் தள்ளலாமா ?
தமிழைத் தானே புறக்கணிப்பார்
தமிழை ஒழிக்கத் தானே துணைபுரிவார்
தமிழ் சோறிடுமா எனவும் கேட்டு வைப்பார்
தமிழ் ஏன் உனக்கு சோறிட வேண்டும் ?
நீ என்ன பிச்சைக்காரனா ?
நீ என்ன அங்கவீனனா ?
உன்னை அமர வைத்து சோறூட்ட
தமிழ்தான் என்ன சாப்பாட்டுக்கடையா ?
அடையாளம் இழக்கும் தமிழனே
அறிவைக் கொன்டு செயல்படுவாய்
உம் மொழியும் இனமும் உனதிருகண்கள் எனும்
உண்மை உணர்ந்து உயர்ந்திடுவாய்...!