ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஏழையின் சிரிப்பில் இயற்கை...!




சூரியனின் சிரிப்பு...
ஒளிவீசி கதிர்பாய்ச்சி ஞாயிறு கோலோச்சும்,
உயிர்களும், பயிர்களும் அதன் அருமை கண்டு மெச்சும்,
இதமான ஒளிவீசி உலகை புலர வைக்கும்,
இரவு நீங்கி பகல் பிற‌ந்திட புவி மலர்ந்து சிரிக்கும்...

நிலவுப்பெண்ணின் வனப்பு...
தேய்பிறையாய், வளர்பிறையாய் காட்சி தந்து ஒளிரும்,
தேனமுதாம் பெளர்ணமியென பரிண‌மித்து மிளிரும்,
அழகு நிலா வானில் கண்டு, கவிதை பொங்கி வழியும்
அடர் இருளும் வழிவிடவே, பகலென ஒளி பொழியும்…

தென்றலின் அணைப்பு...
அலைபாயும் தென்ற‌லது அன்பு மொழியில் கெஞ்சும்,
அருகில் வந்து நெருங்கி நின்று அரவணைத்து கொஞ்சும்,
உடல் தழுவி, உளம் மீட்டும் இன்னமுத கீதம்,
உயிர் வருடி உலகை அணைக்கும் உருவமில்லா நாதம்...

இரவின் கதகதப்பு...
நீல வண்ண நிறம் பொழியும் இரவுப்பெண்ணின் ஆடை,
நீள் பொழுதின் நிறம் காட்டும் கார் நீல ஓடை,
உலகில் நாளும் இரவைப் படைத்து இருளில் ஆழ்த்திடும்,
உயிரை அணைத்து, உற‌க்கம் வளர்க்கும் இருண்ட ராஜ்யம்...

நட்சத்திர பூரிப்பு...
ஆயிரம் ஆயிரம் கண்கள் சிமிட்டிட வானில் கதைபல பேசும்,
அள்ள முடியா பொற்காசுகள் விண்ணில் இரைந்து மின்னும்,
எட்டா வானில் எண்ணிலடங்கா மின்மினிப்பூக்களின் கூட்டம்,
எழில் பொங்க‌ நடமிடும் நவரச நட்சத்திர தோட்டம்...


வானவில்லின் அணிவகுப்பு...
ஏழ் நிற‌ங்கள் எழுந்து வந்து வானில் காட்டும் ஜாலம்,
எவரோ அடுக்கி வைத்துச்சென்ற வட்ட வடிவ கோலம்,
அழகு வர்ணங்கள் திரண்டு வந்து அணிவகுக்கும் காட்சி,
அன்பு மனங்கள் குழந்தையென துள்ளச் செய்யும் மாட்சி...

இறைவனின் படைப்பு...
எல்லாம் படைத்தவன், எங்கும் நிறைந்தவன்,
இறையெனும் அரும்பெயர் கொன்டவன்,
எழிலாய் ஒளிர்ந்து, உயிர்களில் நிறைந்து
உலகை அருளால் ஆண்டவன்,

பயிர்கள் பொழிய, வளங்கள் கொழிக்க
ஐந்தொழில் ஆற்றிடும் அற்புதன்,
உயிர்கள் தழைக்க, உள்ளங்கள் செழிக்க,
இயற்கையாய் மிளிரும் பொற்பதன்...

இதயத்தை ஆட்சி செய்பவன் அவன்
எல்லா உயிரிலும் நிறைபவன்
இயற்கையை படைத்து காப்பவன்,
அவன் தானே இயற்கையில் உறைபவன்....!
  
Preview

சிவனேசு
பினாங்கு