இளைஞனே...
தன்மானத்துடன் எழுந்து நட - நாளைய
தலைவன் நீயே நிமிர்ந்து நட
உண்மையைத் துணையாய் கொன்டுவிடு
உன் உயர்வுக்கு நாளும் பாடுபடு...!
கல்வியே என்றும் நம் கண்கள்
கடமையே என்றும் நம் செல்வம்
கற்றவனாய் உனை மாற்றிக்கொள்
கருணையை மனதில் ஏற்றிக்கொள்
வன்முறை வேண்டாம் ஒதுங்கிவிடு - வாழ்வை
விடமென அழித்திடும் விலகிவிடு
வாழ்வில் உயர்நிலை அடைந்துவிடு
வசந்தம் உன்வழி வாழ்ந்துவிடு
குற்றச் செயல்களில் இறங்காதே
குண்டடிபட்டு மாளாதே
குறுக்கு வழியில் வாழாதே - உன் ஆயுளை
குறுக்கிக் கொள்ளாதே
செய்யும் தொழிலை மதித்து நட
சோம்பல் களைந்து எழுந்து நட
சிந்தையில் ஏற்றம் கொன்டுவிடு
சிறந்தவன் நீ எனக்காட்டிவிடு
வாழ நேர்வழி பல உண்டு
வையகம் வாழ்த்த வாழ்ந்துவிடு
சேரிடம் அறிந்து நீ சேர்ந்தால்
சிறப்பாய் நல்வழி நீ காண்பாய்
குள்ள நரிகளை நாடாதே - அவர்
கருவியாய் மாறிட விழையாதே - இந்த
சமுதாயத்தின் இதயநாடி இனிவரும்
சரித்திரம் போற்றும் சகாப்தம் நீ...!
தாய்நாடும் வீடும் போற்றிடவே
தாயாய், சகோதரி, தோழியாய்
சிந்தை நெகிழப் பாடுகிறேன் - நீ
சிறந்திட நாளும் வாழ்த்துகிறேன்
சிவனேசு
பினாங்கு