செவ்வாய், 30 ஜூலை, 2013

இளைஞனே...


 Art: Cubist-101-3030-Im-The-Man-2.jpg by Artist Thomas C. Fedro


இளைஞனே...

தன்மானத்துடன் எழுந்து நட ‍-  நாளைய‌
தலைவன் நீயே நிமிர்ந்து நட‌
உண்மையைத் துணையாய் கொன்டுவிடு
உன் உயர்வுக்கு நாளும் பாடுபடு...!

கல்வியே என்றும் நம் கண்கள்
கடமையே என்றும் நம் செல்வம்
கற்றவனாய் உனை மாற்றிக்கொள்
கருணையை மனதில் ஏற்றிக்கொள்

வன்முறை வேண்டாம் ஒதுங்கிவிடு - வாழ்வை
விடமென அழித்திடும் விலகிவிடு
வாழ்வில் உயர்நிலை அடைந்துவிடு
வசந்தம் உன்வழி வாழ்ந்துவிடு

குற்றச் செயல்களில் இறங்காதே
குண்டடிபட்டு மாளாதே
குறுக்கு வழியில் வாழாதே - உன் ஆயுளை
குறுக்கிக் கொள்ளாதே

செய்யும் தொழிலை மதித்து நட‌
சோம்பல் களைந்து எழுந்து ந‌ட‌
சிந்தையில் ஏற்றம் கொன்டுவிடு
சிற‌ந்தவன் நீ எனக்காட்டிவிடு

வாழ நேர்வழி பல உண்டு
வையகம் வாழ்த்த வாழ்ந்துவிடு
சேரிடம் அறிந்து நீ சேர்ந்தால்
சிறப்பாய் நல்வழி நீ காண்பாய்

குள்ள நரிகளை நாடாதே - அவர்
கருவியாய் மாறிட விழையாதே - இந்த‌
சமுதாயத்தின் இதயநாடி இனிவரும்
சரித்திரம் போற்றும் ச‌காப்தம் நீ...!

தாய்நாடும் வீடும் போற்றிடவே
தாயாய், ச‌கோதரி, தோழியாய்
சிந்தை நெகிழப் பாடுகிறேன் -  நீ
சிறந்திட நாளும் வாழ்த்துகிறேன்



சிவனேசு
பினாங்கு


வெள்ளி, 19 ஜூலை, 2013

நட்பு...!




சகோதரத்திலும் மேலான உற‌வாய்
சகவாழ்க்கைத்துணையினும் உயர்ந்த இணையாய்
உடன் வரும் நட்பு ‍ - அது
உயிரினும் மேலான‌ கற்பு...!
அழும் போது ஆறுதலாய்
அகம் மகிழும் போது பூரிப்பாய்
இடரும் போது உதவிக்கரமாய்
இருகரம் நீட்டும் உயிர்த்துடிப்பாய்...! 

இன்னலின்போது உதவியாய்
இதயத்தை பகிரும் வழித்துணையாய்
எத்தனை சிற‌ப்பு நட்புக்கு
ஏனோ புரியவில்லை நமக்கு…!

காதல் கொன்டு கரைவதல்ல ‍ - நட்பு
காமம் கொன்டு உறைவதல்ல‌
உள்ளத்தில் அமைந்த சிம்மாசனம் -அது
உயர்ந்தவர் அமரும் பொன்னாசனம்...!

போய் வா என்று கூற‌மாட்டேன் - நீ
போனால் வா என்று வேண்டமாட்டேன்;
இற‌ப்பிலும் எனை விட்டு பிரிவதில்லை -  நட்பு 
உண்மையென்றால் நம்மைவிட்டு மறைவதில்லை...!

ஞாயிறு, 14 ஜூலை, 2013

அம்மா


அன்னை என்னும் அரியவள் - நம்
அன்புக்கு என்றும் உரியவள்
அம்மா எனக் கொஞ்சும் மழலைக்கு - தன்
அணைப்பில ம‌ஞ்சம் தருபவள்
உயிரென பிள்ளையைக் காப்பவள் - தன்
உதிரத்தை அமுதென கொடுப்பவள்
குழந்தை உண்ண படைப்பவள்
குலவிளக்கது செழித்திட மகிழ்பவ‌ள்

அருங்குணம் நிறைந்த திருமதி - அவள்
அவனிக்கு வாய்த்த வெகுமதி
தரணி உய்ய வந்தனள் - அவள்
தாயெனும் தவப்பெயர் கொன்டனள்

இன்னோர் உயிரை ஈன்றவள் - அவள்
இறையும் வணங்கும் இனியவள்
போற்றிடும் தெய்வம் பெற்றவளே
அவர்க்கிணை இங்கில்லை மற்றவரே

தாயே நின்தாள் பணிகின்றேன்
தரணியில் நின்புகழ் தங்கிட‌ வாழ்த்துகிறேன்
மறுமுறை மீண்டும் பிறவிகண்டால் - என்
மகளாய் நீவர வேண்டுகிறேன்....