பத்தும் செய்யும் பணம் - அதற்குண்டு
பாதகம் செய்யும் குணம்
நட்பையும் பெற்றுத் தரும் - சமயத்தில்
நட்டாற்றிலும் விட்டு விடும்
கக்ஷ்டமில்லா வளமும் தரும் - வாழ்வுக்கு
இக்ஷ்டமான பலதும் தரும்
அழகாய் வாழவும் வழிசெய்யும் - நல்
அறிவை வளர்க்கவும் துணைசெய்யும்
இல்லாதவரை வாட வைக்கும்
இயலாமை தந்து ஏங்க வைக்கும்
மாண்பு இல்லா வாழ்வு தந்து - சமயத்தில்
மாபாதகம் புரியவும் வகைசெய்யும்
நல்லவர் கையில் பணமிருந்தால் - அது
நாலு பேருக்கு நன்மை செய்யும் - அதுவே
தீயவனுடைய பையிலிருந்தால் ஊரையே
தீயிட்டுக் கொளுத்தவும் வழி செய்யும்
கொலை, கொள்ளை, பாதகங்கள்
கொடுமை நிறைந்த பல செயல்கள்
பணமே இவற்றுக்கு ஆதாரம் - அதற்கென
மனமது பூசுது அரிதாரம்...!
போற்றி வாழ்த்தும் உறவும் தரும் - பிறர்
புறம் பேசித் தூற்றும் போக்கும் தரும்
புகழ்ச்சி தந்து நெகிழ்ச்சி தரும் - நிஜத்தில்
மகிழ்ச்சியை பறித்து மனக்கிளர்ச்சி தரும்
போதுமான பணம் வளத்தைத்தரும் - மிஞ்சினால்
போதையான மனதைத் தரும்
போதும் எனும் மனம் நன்மை தரும் அது
போகம் நிறைந்த வாழ்வு தரும்
பணம் படைத்த பண்புடையோரே - நல்ல
பாங்(bank )குடன் பணத்தைக் கையாள்வீர்
அளவுடன் நித்தம் தானம் செய்து
அவனியில் புகழுடன் வாழ்ந்திடுவீர்...!