sivanes sivanes
தேரடி வீதியில்
தேவியின் ஊர்வலம் ,
ஊரே கூடி
ஊர்ந்த‌து அவளுடன்...
அன்பைப் பொழியும் அழகிய திருமுகம்,
அவள் அருளுக்கு மிஞ்சிய மாட்சியும் இல்லை
அன்னையின் பின்னே நானும் நடந்தேன்


 கூடாய் மனதில் ஆயிரம் கவலை
வாழும் காலம் இனி எவ்விதம் என் நிலை?
எண்ணிலடங்கா கற்பனை என்னுள்ளே
ஏங்கித் தவித்தேன் எனக்கேன் இந்நிலை ?
20, 30, 40 கடந்து
எனக்கும் முதுமை தொடங்கி விடுமோ ?
மூப்பு, நரைதிரை, பிணியும்
ஓடிவந்தென்னை ஆட்கொன்டு விடுமோ ?
இருபதில் துவங்கி எத்தனையில் முடியும்
இன்னும் எனது வாழும் நாட்கள்
வசந்தம் வீசிட எத்தனை இம்மண்ணில் ?

வண்டாய் குடைந்து வருத்தியது மனது !
வாயை மூடி, மனம் மட்டும் அழுதது

சோகம் சுமந்து நடந்தேன் மெதுவாய்,
சொல்லாத வேதனை சுமந்தேன் தனியாய்,

அக்கா, அக்கா என்றொரு சிறுகுரல்,
அருகினில் என்னை அழைத்தது மெல்ல,
குரலது கேட்டு கூட்டத்தை நோக்கினேன்,
பச்சை சேலையில் பக்கத்தில் ஒரு பெண்
அவளுக்கு இருக்கும் பதினெட்டு,
அழகு கொஞ்சி விளையாடும் இளமொட்டு,

எந்தன் கையைப் அவள் பற்றிக்கொன்டாள்.
என்னவோ சொல்ல தவித்து நின்றாள்
பருவம் துவங்கும் சிறிய பெண்ணவள்,
பச்சை சேலையில் பளிச்சென்று கண்டேன்
சற்றே மாநிறம், களைநிறை சிறுமுகம்
என்னம்மா என்றே கண்ணால் கேட்டேன்,
சேலை நெகிழ்ந்து போனது அக்கா
சரிசெய்து கொடுங்கள், நடக்க முடியலை,  
பாவம் பெண் அவள், பரிதவித்து நின்றாள்
உதவி கேட்டு நானத்தில் சிவந்தாள்

கண்களில் கரிசனம் மின்னிட நானும்
சட்டென சேலையை சரிசெய்து விட்டேன்,
இன்றுதான் சேலை அணிகிறாயா என்றேன்?
ஆமாம் அக்கா, இதுதான் முதல்முறை,
பக்கத்து வீட்டக்கா கட்டி விட்டார்,
பாங்காய் கட்டலை, பாதியில் நெகிழ்ந்தது,
நல்லவேளை உதவிவிட்டீர்கள்,
நன்றி அக்கா நவின்றாள் அப்பெண்,

பதின்ம வயதில் முதல்படி நிற்கிறாள்,
எங்கே இவள் தாய் ?
வாய்விட்டு கேட்டேன்,
அம்மா எனக்கு இல்லை அக்கா,
அவள் மறைந்து ஆண்டு ஒன்றாகிவிட்டது,
விழிகள் நனைய, அவள் வார்த்தைகள் வழிந்தது

என்ன நடந்த‌து?
எனக்கு சொல்வாயா?
என் கேள்விக்கு பதிலை சொன்னாள் அவளும்

அன்பும் அழகும் நிறைந்த வடிவம்
கண்ணாய் எங்களை காத்திட்ட தெய்வம்
நாற்பது வயது, நன்றாய் இருந்தார்,
நலங்குன்றி ஒருநாள் நலிந்து வீழ்ந்தார்,
சில திங்கள் கழித்து சிவனடி சேர்ந்தார்.
அப்பாவின் நிழலில்
நானும் தங்கையும்
வருத்தம் சூழ வாழ்ந்து வருகிறோம்.

நாற்பது வயது, உயிர்விடும் வயதா ?
வாழ்க்கை துவங்கும் வய(த)து தானே ?

என் மனம் கனத்தது,
கண்களும் பணித்த‌து,
முதுமையை எண்ணி
உள்ளம் நோகிறோம்,
உயிரே போனால் வேறென்ன வாழுது ?
பச்சை சேலைப்பெண்
புறப்பட்டுப் போனாள்
என் கண்களைத் கடந்து,
இதயத்தில் நின்றாள்

இனி
இள‌மையோ முதுமையோ
ஏக்கம் எனக்கில்லை
வாழும் நாட்கள் மட்டுமே
நிரந்தரம் இங்கே,
உண்மை உண‌ர்த்திய பெண்ணே உனக்கு
நன்றிகள் என்றேன்,
பெண்ணவள் அங்கே என்முன்னே இல்லை...
நகர்வலம் முடித்து திரும்பினாள் அன்னை....!
இளமை ஒளிரும் அம்மனைக் கண்டேன் ,
இதயத்தில் அன்பாய் இருத்திக்கொன்டேன்| Links to this post | edit post
Reactions: