செவ்வாய், 21 ஜூலை, 2009

ஏழையும் இறைவனும்


என் தந்தை துயிலிடம்
ஏழடுக்கு மாடியில்...

ஏழை இன‌ம் மட்டும்
ஏனோ வீதியில்...

எந்தன் தாயிடம்
எண்ணற்ற‌ நகை‌கள்!

ஏழைப் பெண்ணிடம்
இல்லையே நல்லுடைகள்...

அமுதும் தேனும்
நிவேதனம் இறைவனுக்கு

அரைப்பிடி உணவில்லை
நிலகுலைந்த மனிதனுக்கு...

எங்கள் இனத்தின்
ஏந்தல்கள் நாளும்

ச‌ம‌ய‌ம் வ‌ள‌ர்த்தார்,
சாங்கியம் வ‌ள‌ர்த்தார்,

சமத்துவம் மட்டும்
சமைத்திட மறுத்தார்...

அன்பை விதைத்த
ஆன்றோரே...

அற‌த்தை படைத்த
சான்றோரே...

தர்மம் என்றால்
என்னவென்று
தயவோடிவர்க்கு
எடுத்துரைப்பீர்

ம‌க்க‌ள் சேவையே
ம‌கேச‌ன் சேவை

ஏழை சேவையே
ஏழுமலையான் சேவை...

ஏழைக்கு உணவளிப்பீர், அவர் ஏக்கத்தை துடைத்தொழிப்பீர்....


வியாழன், 16 ஜூலை, 2009

நானெழுதும் நட்பின் சாசனம்



எப்படி இருக்கிறாய்
என் தோழி ?
துயரம் தோய்ந்ததோ

உந்தன் விழி?

நெஞ்சிலே வீரமும்,
நினைவிலே ஈரமுமாய்
எப்படி வாழ்கிறாய்

என் பெண்ணே?
ஏக்கம் கொன்டதோ

உன் கண்ணே?

நான் உன‌க்காக‌
அழ‌மாட்டேன், என்
விழி நீரும்
விட‌மாட்டேன்
விச‌ன‌த்தோடு
விடை த‌ருவ‌தும்,
புலம்பலூடே
பிரிவைப் பெருவ‌தும்
இந்த‌ வாழ்வில்
இயலாத இன்னல்

எந்தன் இதயம்
ஒரு வழிப் பாதை
வருகைக்கு மட்டுமே
வாசல் வைத்தேன்
திரும்பிப்போக
திசையே இல்லை

இதயத்திலே
பிணைத்திருப்பேன்,
இற‌க்கும் வ‌ரை
நினை‌த்திருப்பேன்,
ந‌ட்பு எனும்

சாச‌ன‌த்தில்
ந‌ம் பெய‌ரைப்

பதித்திருப்பேன்!

ஞாயிறு, 12 ஜூலை, 2009

நேசம்







நதியின் வேதனைகள்,
நானல்கள் சொல்லியழ‌...,
கடலின் ஏக்கங்கள்,
அலையெழுந்து ஆர்ப்பரிக்க‌...,

முகில் மேவும் சோக‌ம் யாவும்,
ம‌ழைத்துளியாய் ம‌ண் சேர,

எந்த‌ன் ம‌ன‌ வேத‌னையை
என்னவென்று நானும் சொல்ல‌‌...

காற்றிட‌த்தில்
கலங்கி நின்றேன்,
கவிதைகளை வாரி தந்தது...
மழைமுகிலிடம்
மனதை சொன்னேன்,
உளம் நிறைத்து உயிர் நனைத்தது,
இய‌ற்கையிட‌ம்
இரந்து நின்றேன்,

உன்னை
எந்த‌ன் வாழ்வில்
த‌ந்த‌து...

சனி, 4 ஜூலை, 2009

கம்போங் புவா பாலா...!


ஆப்பசைத்த குரங்குகளாய்
அரசியல்வாதிகள்!

அன்று
ஓட்டு கேட்டு
ஓடி வந்தனர்!

இனிக்கப் இனிக்கப்பேசி
இதயத்தைக் கவர்ந்தனர்!

வாக்குறுதிக‌ளை
வாரியிரைத்து
வான‌ளாவ‌ அள‌ந்த‌ன‌ர்!

ஆரவாரமாய் ந‌ம்
முதுகில் ஏறி,
ஆட்சியும்
பிடித்துக் கொன்ட‌ன‌ர்!

இன்று,

த‌ன‌க்கொன்றும்
தெரியாதாம்,
அப்பாவி
(முத‌ல்)அமைச்ச‌ர்
அள்ளிவிடும்
அதிச‌ய‌ம் பார்!

கவலை வேண்டாம்!
காலம் இதனை
கவனத்தில்
கொள்ளும்!

எதிர்வரும்
தேர்தல் நாங்கள்
யாரென்பதைச்
சொல்லும்!

ஒன்றுபடுவாய்
என் இனமே!
ஒற்றுமை ஒன்றே
உனது பலமே!
சாதி, மதமெனும்
வேற்றுமை வேண்டாம்!
சாதிக்க என்றும்,
ஒற்றுமை வேண்டும்!,

நாளைய
சரிததிரம் நம் பெயர்
சொல்லட்டும்,
நமது சந்ததி
பூமியை வெல்லட்டும்....!


வெள்ளி, 3 ஜூலை, 2009

களைந்த கனவுகள்!


காலமே,
கண்களில் விளைந்த என்
கவிதை வரிகளை,
காற்றென வந்து ஏன்
களவாடிக்கொன்டாய்.?

இயற்கையே, என்
எண்ணத்தில் இடங்கொன்ட
ஈர நினைவுகளை எனக்கே
தெரியாமல் ஏன்
பறித்துச்சென்றாய். ?

கனவுகளே,
சோக‌த்தை
சொந்த‌மாக்கி
சொர்க்க‌த்தை
தூரமாக்கி

சொல்லாம‌ல்
செ(கொ)ல்வ‌துதான்
உ‌ன் நியாய‌மா?‌

தேடிவ‌ரும் தென்ற‌லும்,
பாடிவ‌ரும் ப‌ற‌வைக‌ளும், உனை
நாடிவந்து உற‌வாட,
வசந்தம் வீசும்
நீயும் அங்கே,
வாடி நிற்கும்
நானும் இங்கே!

வியாழன், 2 ஜூலை, 2009

வலியும் வலிமையும்


மேகங்கள்
மறைத்தாலும்
சூரியனுக்கு
மரணமில்லை!

ஆர்ப்பரித்தே
அலை எழுவதால்
ஆழ்கடலும்
குறைவதில்லை!

தொலைந்திடுவோம்
என பயந்து
தென்றல்
தவழ
மறுப்பதில்லை!

இதயமே
இழப்புகளை
எண்ணி
ஏனிந்த பயம்

எல்லா
ஆரம்பத்திலும்
முடிவுண்டு
எல்லா
முடிவிலும்
ஆரம்பமுண்டு

கண்ணீரைத்
துடைத்துவிடு!
கவலைகளை
துரத்திவிடு!
நல்ல நாள்
நாளை வரும்
நிறைந்த இன்பம்
நமக்குத் த‌ரும்!